25 July 2010

நட்பு எனும் அழகான விஷயத்தை அனுபவிக்க வேண்டும். ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது.

நட்பு என்பது ஒருவரின் ஆழ்மனத்திலிருந்து வரும் ஓர் அற்புதமான உணர்வே ஆகும். அந்த உணர்வுக்கு எல்லை என்பதே இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்படிப்பட்ட நட்பானது எப்படி இருக்க வேண்டுமென்று நம் வள்ளுவரே, “முகநக நட்பது நட்பன்று, நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு” என மிக அழகாக சொல்லியிருக்கிறார். அப்படி மனதில் இருந்து வரும் ஆழ்ந்த நட்பானது என்றுமே நிலைத்திருக்கும் என்பதை நம்மில் பலர் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கலாம். 

இப்படி நாம் ஒருவரிடத்தில் நட்பு பாராட்டும்பொழுது அதன் எல்லை எதுவரை இருக்க வேண்டும் என்பதை நிறைய பேர் விவாதிக்கவே செய்கிறார்கள். இது அவரவரைப் பொறுத்ததாகவே நான் கருதுகிறேன். ஏனெனில், என் தோழனோ தோழியோ நான் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் இருக்க வேண்டும் என்பது என் விருப்பமாக இருக்குமாயின் அதை அடுத்தவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் எந்த கட்டாயமும் இல்லை அல்லவா? ஒரு சிலருக்கு இப்படி நட்பு என்ற பெயரில் எல்லா விவகாரங்களிலும் நண்பர்கள் தலையிடுவது பிடிக்காது. 

ஆழ்ந்த நட்புடனும் அன்புடனும் பழகும் உண்மையான நண்பர்கள் இதுதான் நமது எல்லை என்பதை வரையறுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். தன் நண்பனைப் பாதிக்காத வரையில் அவர்கள் நடந்துக்கொள்வார்கள். அதேவேளையில் அதே நண்பனுக்கு ஆபத்து என்றால் உடனே வேலியை அறுத்துக்கொண்டு ஓடி வந்து தன் உயிரைக் கொடுத்து உதவுவார்கள். 

நட்பு எனும் அழகான விஷயத்தை அனுபவிக்க வேண்டும். ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது. அப்படி ஆராய்ந்தால் அந்த நட்புக்கே கலங்கம் ஏற்படும். எப்போது ஒருவன் சுயநலமில்லாமல், எதையும் எதிர்ப்பார்க்காமல் ஒருவனிடத்தில் நட்பு கொள்கிறானோ அப்போதே அவன் நட்பின் புனிதத்தன்மையைக் காப்பாற்ற ஆரம்பிக்கிறான். உற்ற இடத்தில் தோள் கொடுத்து, உனக்காக நான் இருக்கிறேன், நானும் வரேன் என்று உணர வைத்து தலைநிமிர வைக்கும் நட்புக்கு கற்பு இருக்கிறது; எல்லை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

No comments:

Post a Comment

பகல் தீண்டாத இரவுகள் இங்கு இல்லை...
காதல் தீண்டாத இதயம் இங்கு இல்லை...
தீண்டிய இதயம் நிலையாக வாழ்வதில்லை...
நிலையாக வாழும் இதயம் காதலை விட்டு விலகுவதுமில்லை...

“நட்பு மலர்கள்” பிரிவால் வாடினாலும்
அதன் “வாசம்” என்றும் இதயத்தில் வீசும்...!
சிறகில்லா பறவையும், சிறகடித்து பறப்பதென்றால்
“நட்பு” எனும் இறகுகள் இருப்பதினால் மட்டுமே...!
பாலில் கலந்த நீரைப்போல எம் இரத்தித்தில் கலந்தது நம் நட்பு..!
பால் நீரிலிருந்தும் பாலை மட்டும் பிரித்திடுமாம் அன்னப்பறவை...!
எம் இரத்தத்திலிருந்து நம் நட்பை பிரிப்பதென்றால்...
எம் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தால் மட்டுமே...!!

சிலர் அன்பை வார்த்தைகளால் உணரலாம்...
சிலர் அன்பை செயல்களால் உணரலாம்....
சிலர் அன்பை உணர்வுகளால் உணரலாம்....
ஆனால் என் அன்பு புரியாது....
அதை காலங்கள் உணர்த்தும் போது.. கண்கள் கலங்கும்...
காரணம்... உயிர் பிரிந்து விடும்....
உங்கள் வருகைக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்... மீண்டும் வருக...!